ஆன்மிகம்
கொப்பரையில் வைப்பதற்காக பிரமாண்ட திரி கயிறு கட்டி கொண்டு செல்லப்பட்ட போது எடுத்த படம்.

மலைக்கோட்டை உச்சியில் உள்ள கொப்பரையில் பிரமாண்ட திரி வைக்கப்பட்டது

Published On 2019-12-03 10:47 IST   |   Update On 2019-12-03 10:47:00 IST
கார்த்திகை தீபத்தையொட்டி மலைக்கோட்டை உச்சியில் செப்பு கொப்பரை அமைக்கப்பட்டு, அதில் பிரமாண்ட திரி வைக்கப்பட்டது. அதில் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது.
கார்த்திகை தீப திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும்.

இந்த தீபத்திருநாளில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் கார்த்திகை தீபத்தையொட்டி 300 மீட்டர் பருத்தி துணியில் திரி தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணி முடிவடைந்து, பிரமாண்ட முறையில் தயாரிக்கப்பட்ட திரியை கோவில் ஊழியர்கள் கயிறு கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள செப்பு கொப்பரையில் வைக்க நேற்று மாலை தூக்கிச்சென்றனர்.

பின்னர், கோபுரத்தின் உச்சிக்கு கயிறு கட்டி எடுத்துச் சென்று செப்பு கொப்பரையில் திரியை வைத்தனர். பின்னர், அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் அளவு கொண்ட இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை கொப்பரையில் ஊற்றும் பணி தொடங்கியது. அவற்றை கொஞ்சம், ெகாஞ்சமாக கொப்பரையில் ஊற்றினார்கள். இந்த பணி ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும். எண்ணெயை திரி நன்றாக உறிஞ்சிய பிறகு மகா தீபம் ஏற்றப்படும். எண்ணெய் ஊற்றும் பணி மேலும் சில நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Similar News