ஆன்மிகம்
வேளாங்கண்ணி மாதா பேராலய வளாகம் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-06-28 15:24 IST   |   Update On 2021-06-28 15:24:00 IST
ஊரடங்கில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வார்கள்.

கொரோனா 2-வது அலை பரவியதால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்பிரகாரத்தில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பேராலயத்தின் முன்பக்க கதவு மூடப்பட்டுள்ளது.

இதேபோல சிக்கல் சிங்காரவேலவர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூர் தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் வகையில் உள்ள நாகை மாவட்டத்திற்கு ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் ஒரு சில மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய காத்திருந்த நிலையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல வேளாங்கண்ணியை பொறுத்தவரை பேராலயத்திற்கு வரும் பக்தர்களை நம்பி தான் பல்வேறு கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். வழிபாட்டு தலங்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு சில பேன்சி ஸ்டோர் கடை, பொரி கடை, பட்டாணி கடை, ஜவுளி கடை உள்ளிட்ட கடைகள் மட்டும் திறந்திருந்தன. கடைகள் திறந்திருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வராததால் கடைகள் வெறிச்சோடி கிடந்தன.

Similar News