ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 6-ந்தேதி ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்

Published On 2021-06-29 14:41 IST   |   Update On 2021-06-29 14:41:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில் விரைவில் கோவில் திறக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினசரி காலை, மாலையில் தங்க, வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

விழாவில் 5-ம் திருவிழாவான 10-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. தேர்திருவிழா 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. சிகர விழாவான ஆனி திருமஞ்சனம் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் மகாஅபிஷேகம் நடக்கிறது.

பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 16-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதுடன், தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது. எனவே விரைவில் கோவில்கள் திறக்கப்படும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த வகையில் ஆனி திருமஞ்சனவிழாவிலும், பங்கேற்று நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Similar News