வழிபாடு

பக்தர்களுக்காக தயார் செய்யப்பட்ட உணவு.

பழனி அருகே பெரியதுரையான் கருப்புசாமி கோவிலில் 300 ஆடுகள் பலியிட்டு வழிபாடு

Published On 2023-04-25 11:51 IST   |   Update On 2023-04-25 11:51:00 IST
  • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  • கிராம மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.

பழனி அருகே கோம்பை பட்டியில் பிரசித்திபெற்ற பெரியதுரையான் கருப்புசாமி கோவில் உள்ளது. பழனிசுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இவரை காவல்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கருப்புசாமிக்கு விழா எடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சித்திரை மாதம் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைதொடர்ந்து தினந்தோறும் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கருப்புசாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஆடுகளை பலியிட்டு அசைவ உணவு தயாரித்து அதனை அன்னதானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் தங்கள் பிரச்சினைகள் தீரவும், வேண்டுதலை நிறைவேற்றியதற்கும் பக்தர்கள் ஆடு, கோழிகளை காணிக்கையாக வழங்குவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை பலியிட்டு அதன்பின்பு உணவு தயாரிக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி, கோம்பைபட்டி, கணக்க ன்பட்டி உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.

Similar News