வழிபாடு

திருவண்ணாமலையில், பவுர்ணமியை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

Published On 2024-05-23 08:45 IST   |   Update On 2024-05-23 08:45:00 IST
  • லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
  • சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று வைகாசி விசாகம் என்பதாலும் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.

பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும் மாலைக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணி அளவில் நிறைவடைகின்றது. அதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

Tags:    

Similar News