வழிபாடு

கூடலூர் அருகே பகவதி அம்மன் கோவிலில் நெற்கதிர்கள் வைத்து வழிபாடு

Published On 2022-11-05 13:12 IST   |   Update On 2022-11-05 13:12:00 IST
  • அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கூடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் வாழை, பாக்கு, தென்னை, நெல் மற்றும் காய்கறி விவசாயத்தில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நிலத்தில் விளைந்த பொருட்களை குலதெய்வ கோவில்களில் படைத்து வழிபடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

நடப்பாண்டில் கடந்த மாதம் 27-ந் தேதி கூடலூர் புத்தூர்வயலில் புத்தரி எனும் நெல் அறுவடை திருவிழாவை கொண்டாடினர். இதற்காக விரதம் இருந்து வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து தங்களது பாரம்பரிய பழமையான கோவில்களில் வைத்து வழிபட்டனர். அதன் பின்னரே சுற்று வட்டார கிராமப்புறங்களில் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்து கோவில்களில் வைத்து வழிபடுகின்றனர்.

கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே தைத மட்டம் கிராமத்தில் தங்களது நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். பின்னர் செண்டை மேளம் முழங்க நெற்கதிர்களை ஊர்வலமாக எடுத்து வந்து தரவாடு பகவதி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நெல் மட்டுமின்றி வாழைத்தார்கள் அறுவடை செய்யும்போது கடவுளுக்கு படையல் செய்வது வழக்கம். விளைபொருட்களை அறுவடை செய்யும் போது குலதெய்வ கோவில்களில் வைத்து வழிபட்டால் விவசாயம் செழித்து மக்கள் வளமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் சார்ந்த விழாக்கள் நடத்தப்படுகிறது என்றனர்.

Tags:    

Similar News