திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்
- 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
- பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை அதிகாலை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.
ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள், தரிசனம் செய்ததாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோவில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது.
மேலும், பூத நாராயண கோவிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 4 தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.
மேலும் கர்ப்பிணிகள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கட், நீர்மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவில் வெளி பகுதியில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கடந்த 2 நாட்களில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. சிறப்பு பஸ் ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.