கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் 22-ந்தேதி லட்சார்ச்சனை
- காலகாலேஸ்வரர் கோவில் குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
- இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22-ந்தேதி குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:-
குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். விழாவில் ரூ.400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.