திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- தீபத்திருவிழா இன்று தொடங்கி டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 5-ந்தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கி அடுத்த டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் பதினாறுகால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகின்ற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வருகின்ற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது.
பதினாறுகால் மண்டப வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.