குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடபொருட்களை போட்டி போட்டு வாங்கி வரும் பக்தர்கள்
- தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
- பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர்.
உடன்குடி :
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் அக். 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர். மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும், விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணிவதற்கு சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களுக்கான தசரா பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியிலுள்ள கடைகளில் பக்தர்கள் வேடமணியும் பொருட்களை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.
இந்த பொருட்களை பக்தர்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதால், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், குரும்பூர், சாத்தான்குளம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பக்தர்களின் வேட பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது.