வரங்களை வாரி வழங்கும் நெல்லையப்பர்
- கோவிலில் உள்ள கொடி வகைகள், வாகனங்கள் யாவும் பழமை சிறப்புடையனவாகும்.
- கல்வெட்டுகளும் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை.
நெல்லை நகரின் மத்தியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் நெல்லையப்பர் வரங்களை வாரி வழங்கி பக்தர்களை காக்கிறார். இக்கோவில் மொத்தத்தில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட எல்லையுள் அமைந்துள்ளது. அம்மன் கோவிலும் சுவாமி கோவிலும் புராணப்படி முதலில் முழுதுகண்ட ராமபாண்டியனாலும், பின் கி.பி. 7-ம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டனவாம்.
ஆலயங்கள் இரண்டும் தனித்தனியாக விளங்கியதால் இடைவெளியை அழகுபடுத்த எடுத்த முயற்சியின் விளைவாக கி.பி. 1647ல் வடமலையப்பப்பிள்ளை இரு கோவிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை அமைத்தார்.
இதில் பச்சை வடிவாள், காசி விசுவநாதர், சாஸ்தா, பீமன் ஆகியோரது சிலைகள் உள்ளன. சங்கிலி மண்டபத்தின் மேற்கே சுப்பிரமணியசுவாமி கோவிலும், மேற்புறம் நந்தவனமும் இதன் நடுவில் நூறு கால்களுடன் அமைந்துள்ள வசந்த மண்டபமும் அமைந்துள்ளன. இங்கு சமயச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, சுவாமி அம்மனுக்கு வசந்த விழா ஆகியவை நடைபெறுகின்றன.
சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவற்றின் அமைப்பு பண்டைக்காலத் தமிழர் சிற்பக்கலை சின்னங்களாகும். ஒரே கல்லில் வடித்த மயில்வாகனத்தில் ஆறுமுகனார், வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்திருப்பது மற்றொரு எடுத்துக்காட்டாகும். இக்கோவில் முன் மண்டபமாகிய இரண்டு அம்பலங்களும் அலங்கார வேலைப்பாடு மிகுந்தவை. சுவாமி சந்நிதியில் இடது மண்டபத்திற்குத் தெற்கே கற்றூண்களில் இசையாளர்கள், வீரர்கள் உருவங்கள் பார்த்து மகிழத்தக்கவை.
கொடிமரத்திற்கு மேற்கே கோவில் முகப்பு மண்டலத்தில் தூண்களில் வீரபத்திரர் முதலிய சிலைகள் சிற்பியின் கைத்திறனைக் காட்டுகிறது. ஈசானத்தில் விளங்கும் பெரிய நடராசப் பெருமானின் விக்ரகம் உண்மையில் ஒருவர் ஆடுவதைப் போல் அழகுடன் மனதைக் கொள்ளை கொள்கிறது.
தெற்குப் பிரகாரத்தில் கல்லால் அமைந்துள்ள பொல்லாப் பிள்ளையார், மேல் பகுதியில் கல்லினால் அமைக்கப்பட்டுள்ள நடன மண்டபம், தாமிரசபை, அதிலிருக்கும் மரச்சிற்பங்கள், தாமிரசபைக்கு வடபுறம் உள்ள நடராசர் சிலை ஆகியன அரிய வேலைப்பாடு கொண்டவை.
கோவிலில் உள்ள கொடி வகைகள், வாகனங்கள் யாவும் பழமை சிறப்புடையனவாகும். கல்வெட்டுகளும் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை. கோவிலின் சப்தஸ்வரக் கற்றூண்கள் அரியவையும், வியக்கச் செய்பவையும் ஆகும்.
கணபதி, முருகனை வழிபட்டு உள்ளே நுழைந்தால் ஊஞ்சல் மண்டபம். இதில் 96 கற்றூண்கள் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன. ஐப்பசி மாதம் அம்மன் திருக்கல்யாணம் முடிந்து மூன்று நாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
கோவிலில் நூல்நிலையம், தேவாரப் பாடசாலை உள்ளன. இதையடுத்துப் பசுமடம், திருக்கல்யாண மண்டபம் உள்ளன. 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரச் செங்கோல் விழா, அம்மன் திருமண விழாயாவும் நடைபெறுகின்றன. அடுத்து வடபுறம் பொற்றாமரை என்னும் புண்ய தீர்த்தம் உள்ளது. இதில் மாசி மாதம் தெப்பவிழா நடைபெறுகிறது. தடாகத்தின் மேல்புறம் பொற்றாமரைப் பிள்ளையார், வாணி, தட்சிணாமூர்த்தி, பால்வண்ணநாதர் சன்னதிகள் உள்ளன.