வழிபாடு

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா

Published On 2022-06-16 12:30 IST   |   Update On 2022-06-16 12:30:00 IST
  • ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடந்தது. கடந்த 13-ந்தேதி திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் விழா தொடங்கியது. விழாவில் ஞானசம்பந்தருக்கு சாமி, அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நேற்றுமுன்தினம் ஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்கொடை, முத்து சின்னங்களுடன் முத்து திரு ஓடத்தில் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தல் விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் ஏறி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து முத்துப்பல்லக்கு திருமேற்றளிகை கைலாசநாதர் கோவிலுக்கும், காலை 10 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோவிலுக்கும், மதியம் 12 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானசம்பந்தரை தரிசனம் செய்தனர். இரவு தேனுபுரீஸ்வரர், ஞானாம்பிகை அம்பாள் முத்து விமானத்தில் காட்சியளிக்க ஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி சாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News