வழிபாடு

கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-07-17 11:01 IST   |   Update On 2023-07-17 11:01:00 IST
  • 24-ந்தேதி அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
  • தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் பவனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் 481-வது பெருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் சந்தியாகப்பரின் திருஉருவம் பதித்த கொடியை பரமக்குடி வட்டார அதிபர் திரவியம் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் அமல்ராஜ், ராமேசுவரம் நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சியாமுதீன், மைதீன் ராஜா, இந்து சமுதாய நிர்வாகிகள் நாகேந்திரன், முருகேசன், வல்லவ கணேசன் மற்றும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு திருவிழாவின் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் ஆலய கொடியேற்றம் மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியில் மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News