ஆற்றூர் புனித அந்திரேயா ஆலய பங்கு குடும்ப பெரு விழா திருப்பலி இன்று நடக்கிறது
- ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது.
- நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.
ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 30-ந்தேதி பங்கு குடும்ப விழா தொடங்கி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.
நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 9.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் அருளுரை வழங்குகிறார்.
ஆலய பங்குத்தந்தை பெ.வெலிங்டன் கூறியதாவது:-
ஆற்றூரில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து மண் சுவராலான ஓலைக் கொட்டகை அமைத்து, புனித அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தனர்.
அதன்பிறகு, அதாவது 75 ஆண்டுகளுக்கு முன் கல்லினால் சுவர் எழுப்பி, ஓட்டுக்கூரையால் ஆலயம் அமைத்து வழிபட்டனர். புத்தன்கடை பங்கின் கிளைப்பங்காக ஆற்றூர் செயல்பட்டு வந்தது. தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், சில காலத்திற்குப் பிறகு மாதத்திற்கு ஒருமுறையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
புனிதரின் பரிந்துரையில் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்ததால், மக்களின் வருகை அதிகரித்தது. அப்போதைய புத்தன்கடை பங்குத்தந்தை மரியதாசனால் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அருட்பணியாளர் சார்லஸ் பொரோமியோவால் ஆலய கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.5.1979 அன்று ஆயர் ஆரோக்கியசாமியால் அர்ச்சிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.
புத்தன்கடை பங்கில் பொறுப்பேற்றிருந்த அருட்பணியாளர்கள் சூசை, இயேசு ரெத்தினம் ஆகியோர் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தனர்.
அதன்பிறகு 24.5.1991 அன்று ஆயர் லியோன் அ.தர்மராஜ் கோட்டார் மறை மாவட்டத்தின் 100-வது தனி பங்காக ஆற்றூர் உயர்த்தப் பட்டது.
மாத்தூர், ஏற்றகோடு, தச்சூர், மாத்தார் ஆகிய பங்குகளை ஆற்றூரின் கிளைப்பங்குகளாக கொண்டு, அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, ஆற்றூரின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
அருட்பணியாளர் லாரன்ஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 26.5.2012 அன்று ஆயர் பீட்டர் ரெமிஜியுசால் அர்ச்சிக்கப் பட்டது.
பங்குத்தந்தை ஜே.செல்வராஜ் பணிக்காலத்தில் புனித அந்தோணியார் குருசடி புதுப்பிக்கப் பட்டது.
18.6.2022 அன்று நான் இவ்வாலய பங்குத்தந்தையாகப்பொறுப்பேற்றேன். தொடர்ந்து ஆலயம், குருசடி ஆகியவற்றைப்புதுப்பித்து இறை நம்பிக்கையில் மக்களை வழி நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.