இரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 25-ந்தேதி பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
- 24-ந்தேதி புது நன்மை திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கு அருட்பணியாளர் லியோன் தலைமை தாங்குகிறார்.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும், இரவு அன்பியங்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 21-ந்தேதி இரவு புனித அன்னாள் தொடக்கப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 22-ந்தேதி இரவு டோன் போஸ்கோ இளைஞர் இயக்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
23-ந் தேதி காலை 6 மணிக்கு உறுதி பூசுதல் திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். .
24-ந் தேதி காலை 6 மணிக்கு புது நன்மை திருவருட்சாதன திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.
25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. இரவு பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பகல் 2 மணிக்கு பரலோக அன்னையின் தேர்பவனி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஏ.ஜே.கிறிஸ்டியன், பங்கு பேரவை துணைத் தலைவர் டி.வி.சி.விட்மன், செயலாளர் ஜோசப்கிராசியஸ், துணைச் செயலாளர் டெய்சி மெரிட், பொருளாளர் பாத்திமா மைக்கிள் ராஜன், பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், புனித அன்னாள் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.