அருள்மழை பொழியும் வடக்குகோணம் புனித அன்னம்மாள்
- புனித அன்னம்மாள் சந்தனமாதா என்று உலகெங்கும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
- இந்த ஆலயம் தூய அன்னம்மாள் ஆலயம் என அழைக்கப்பட்டது.
குருசடி பங்கின் புனித அந்தோணியார் ஆலயம் 1911-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இந்த பங்கின் ஒரு பகுதியாக வடக்குகோணம் குருசடி இருந்து வந்தது. அன்று இந்த பகுதியில் 35 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்த கிராமத்தில் வாழ்ந்த பெரியவர்கள் தங்களுக்கும் ஓர் ஆலயம் வேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அவர்களது பெரும் முயற்சியால் 1956-ம் ஆண்டு ஓலைகளால் ஆலயம் அமைத்தனர். இந்த ஆலயம் தூய அன்னம்மாள் ஆலயம் என அழைக்கப்பட்டது.
காலம் செல்ல செல்ல ஓலைகளால் ஆன ஆலயம் மக்கள் வந்து வழிபடுவதற்கு போதுமானதாக இல்லை. பக்தி ஆர்வமிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இங்கு அதிகம் வாழ்ந்ததால் அவர்கள் கல்லினால் ஓர் ஆலயம் கட்டி முடித்தார்கள். குருசடியில் அன்றைய பங்குதந்தையாக இருந்த ஆர்.அந்தோணிமுத்துவின் கடுமையான முயற்சியால் கோட்டார் ஆயர் டி.ஆர். ஆஞ்சிசாமி 6-1-1964 அன்று இந்த ஆலயத்தை அர்ச்சித்தார்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைமக்களின் பெரும் முயற்சியால் ஆலயத்தின் பக்கத்தில் நிலங்கள் வாங்கப்பட்டது. 29-9-1989 அன்று கோட்டார் ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் தற்போதுள்ள ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஊர்மக்களின் விடா முயற்சியாலும், மிகுந்த ஒற்றுமையினாலும் உடல் உழைப்பாலும் மிக குறுகிய காலத்தில் மிக அழகிய தோற்றத்துடன் ஆலயப்பணி முடிக்கப்பட்டது. அருட்பணியாளர் ஜோசப்ராஜ் குருசடி பங்குதந்தையாக இருந்த போது 10-8-1990 அன்று ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் புதிய ஆலயத்தை அர்ச்சித்தார்.
புதிய ஆலயத்தில் பழைய கோபுரம் என்ற நிலையை மாற்ற மக்கள் பல முயற்சிகள் எடுத்தார்கள். மக்களின் தாராளமான நன்கொடையாலும், பங்குபேரவையின் அயராத உழைப்பாலும் இறைமக்களின் உழைப்பாலும் புதிய கோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. புதுப்பொலிவோடு மிக குறுகிய காலத்தில் கோபுரம் கட்டி எழுப்பப்பட்டது.
23-4-2000 உயிர்ப்பு பெருவிழா அன்று மறைமாவட்ட குருகுல முதல்வர் குரூஸ் எரோனிமூஸ் திருப்பலி நிறைவேற்றி புதிதாக கட்டப்பட்டுள்ள கோபுரத்தை அர்ச்சித்தார். தொடர்ந்து பல ஆண்டுகள் கிளை பங்காக இருந்த வடக்குகோணத்தை தனிபங்காக மாற்றுவதற்கு உள்ள ஏற்பாடுகளை மக்கள் செய்ய தொடங்கினர்.
பங்குதந்தை வரும்போது அவர் தங்குவதற்கு நல்லதொரு இல்லம் வேண்டும் என்று மிகவும் வசதியான இல்லத்தை கட்டத்தொடங்கினர். 9-8-2002 அன்று அருட்பணியாளர் ஜான்குழந்தை பங்குதந்தை இல்லத்தை அசீர்வதித்து திறந்து வைத்தார். தொலைநோக்கு பார்வையுடன் பெதுமக்கள் பயன்படுத்துவதற்கு சமூக நலக்கூடம் ஒன்று தேவையென்று உணர்ந்த அன்றைய பங்குபேரவையினர் 9-8-2002 அன்று சமூக நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினர். அன்றைய குருகுலமுதல்வர் ஜான் குழந்தை அடிக்கல் நாட்டினார்.
கோணம் கிளைபங்கு, பங்காக உயர்த்தப்பட வேண்டுமென்று அனைவரும் சேர்ந்து உழைத்தனர். மக்களின் முயற்சி வெற்றி பெற்றது. 31-5-2004 அன்று தனி பங்காக உயர்த்தப்பட்டு ஆயர் லியோன் ஏ.தர்மராஜ் திருப்பலி நிறைவேற்றினார். மேலும், அருட்பணியாளர் ஆன்டனி அல்காந்தர் முதல் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டார்.
23-3-2008 அன்று ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மூலம் பங்குமக்களின் பெரும் முயற்சியால் கட்டப்பட்ட சமூகநலக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த காலத்தில் இந்த பங்கில் செயல்பட்டு வரும் புனித அன்னம்மாள் நிதிநிறுவனத்தின் வழியாக பங்கு அருட்பணி பேரவை மக்களுக்கு சிறிய அளவில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக உதவி புரிந்தது. தொடர்ந்து ஆலயத்தின் பீடம் மற்றும் பீடத்தையொட்டி உள்ள ஆலய முகப்பு புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தை விரிவுபடுத்தி, ஆலய சுவர்களையும், கதவு நிலைகளையும் அழகுபடுத்தப்பட்டு ஆயர் நசரேன் சூசை 20-9-2021 அன்று அர்ச்சித்து வைத்தார்.
கோணம் பங்கின் பாதுகாவலர் புனித அன்னம்மாள் சந்தனமாதா என்று உலகெங்கும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு சிறந்த இலக்கணமாக திகழ்கின்ற புனித அன்னம்மாள் வழியாக குழந்தைப்பேறு அடையவும், கேட்டவரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். குறிப்பாக புதன்கிழமைதோறும் மாலையில் நடைபெறும் நவநாள் திருப்பலியில் பங்கெடுத்து இறைவேண்டல் செய்து இறையாசீர் பெற்று மகிழ்வுடன் இல்லம் திரும்புகிறார்கள்.
புனித அன்னம்மாள் தாயாரோ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
-அருட்பணியாளர் எம்.ஜோசப்காலின்ஸ், பங்குப்பணியாளர்.