காரைக்குடி செஞ்சை புனித தெரசா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- வருகிற 8-ந் தேதி தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது.
- 9-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
காரைக்குடி செஞ்சை பகுதியில் புனித தெரசாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா சரிவர நடக்கவில்லை. இந்தாண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோ ணிச்சாமி அர்ச்சிப்பு செய்து கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி தினந்தோறும் திருச்ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி வருகிற 8-ந்தேதி மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. ஆலயத்தில் இருந்து புறப்படும் தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தில் நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழக ஆயர் பேரவை துணைத்தலைவர், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி ஆற்றுகிறார்.
9-ந்தேதி காலை முதல் திருவிருந்து விழா, திருப்பலி நிகழ்ச்சியுடன் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அருட்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் சிவகங்கை முன்னாள் மாவட்ட முதன்மை குரு அருளானந்தம், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பணிக்குழுக்கள், செஞ்சை பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.