வழிபாடு

சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாநாளை தொடங்குகிறது

Published On 2022-08-18 07:02 GMT   |   Update On 2022-08-18 07:02 GMT
  • 26-ந்தேதி அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார்.

குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். உச்சிப்படிப்பு பணிவிடைகளை பையன் கிருஷ்ண நாம மணி செய்கிறார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகன பவனியும் நடைபெறுகிறது.

வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தினமும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News