திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம்
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு பக்தர்கள் கிரிவலம் வந்து சென்றனர்.
- திருவண்ணாமலைக்கு நிகராக திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம் தனி முத்திரை பதித்து வருகிறது.
திருப்பரங்குன்றம் மலையை வட திசையில் இருந்து பார்க்கும்போது கைலாய மலை போன்றும், கிழக்கில் இருந்து பார்க்கும்போது பெரும் பாறை போன்றும், தெற்கு திசையில் இருந்து பார்க்கும்போது பெரிய யானை படுத்து இருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கும் போது சிவலிங்க வடிவமாகவும் காட்சி அளிக்கிறது. கோவிலின் கருவறை ஆனது மலையை குடைந்து அமைய பெற்று உள்ளது. இங்கு விமானம் கிடையாது. மலையே விமானமாக அமைந்து உள்ளது. மலையானது சிவலிங்க வடிவமாக இருப்பதாலும், முருகப்பெருமானின் திருக்கல்யாணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து சென்றுள்ளனர்.
ஆகவே இந்த தலத்தில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் கிரிவலம் வந்தால் மலையாக காட்சி தரும் சிவபெருமானின் அருளும், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு பக்தர்கள் கிரிவலம் வந்து சென்றனர்.
ஆனால் சமீபகாலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கிரிவலம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவருகிறார்கள். அதனால் கிரிவலமானது திருவிழாவாகவே மாறி வளம் பெற்று வருகிறது. திருவண்ணாமலைக்கு நிகராக திருப்பரங்குன்றமும் பவுர்ணமி கிரிவலத்தில் தனி முத்திரை பதித்து வருகிறது என்றால் மிகையாகாது. ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிக்கவேண்டும். கார்த்திகை அன்று தங்கமயில்வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் முக்கிய ரதவீதிகளில் நகர்வலம் வருவதுபோல பவுணர்மி தோறும் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.