வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-07-19 11:38 IST   |   Update On 2022-07-19 11:38:00 IST
  • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
  • ஆடி மாதம் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

விடுமுறை தினம் மற்றும் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளம் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வருகின்ற 23-ந்தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வருகின்ற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக சரவணப்பொய்கை குளத்தில் இந்தாண்டிற்கான தெப்பம் கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் பேரல்களுக்கு வண்ணம் தீட்டபட்டு, தெப்பத்தை கட்டி குளத்தில் மிதக்க விட்டு பரிசோதித்தனர். ஓரிரு நாட்களில் தெப்பம் கட்டும் பணி முழுமை பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் விரதம் இருந்து கோவிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து திரளான பெண்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், நேர்த்தி கடனை செலுத்தி சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

மேலும், வேண்டுதல் நிறைவேற்ற 20-க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்திலேயே சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா நேற்று நடைபெற்றது.

Tags:    

Similar News