வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-06-25 07:11 GMT   |   Update On 2022-06-25 07:11 GMT
  • இந்த கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு 418 ஆண்டுகளுக்குப் பின்பு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நடந்த கோவிலை புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

கோவில் கருவறை விமானம், கூரை மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபம் ஆகியன அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பளபளப்புடன் காட்சி அளிக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு நாராயணிய பாராயணம், மாலை 5 மணிக்கு வாஸ்து கலச ஹோமம், இரவு 7 மணிக்கு சுரதவனம் முருகதாஸ் குழுவினரின் பக்தி இசை, சொற்பொழிவு போன்றவை நடைபெறுகிறது.

30-ந் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீமத் பாகவத பாராயணம், மாலை 5 மணிக்கு எம்.பி.ஆதிராவின் ஆன்மிகச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் தியா நாயர் வழங்கும் பரதநாட்டியமும், வருகிற 1-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்கத்தா முகுல் முகர்ஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வருகிற 2,3,4,5-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

2-ந் தேதி இரவு 7 மணிக்கு பிந்து லட்சுமி வழங்கும் கிருஷ்ணகதா நடனம், 3-ந் தேதி மாலை 5 மணிக்கு பவநேத்ரா குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு 7 மணிக்கு நாமக்கல் நாட்டியாஞ்சலி குழு சர்மிதா பிள்ளையின் பரதநாட்டியம், 4-ந் தேதி மாலை 5 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் சாமி வழங்கும் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு காணிமடம் குழுவினர் வழங்கும் நர்த்தன ரம்மிய பஜனை, 5-ந்தேதி மாலை 5 மணிக்கு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா வழங்கும் அருளுரை, இரவு 7 மணிக்கு சென்னை ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெறுகிறது.

6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம், 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வேத மந்திரம் முழங்க கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. 7 மணிக்கு இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

8 மணிக்கு முளவிளை ஸாத்விகா சமாஜ இசை நாட்டிய அகாடமி சார்பில் "துவாபர யுகத்தின் சிறப்பு" என்ற தலைப்பில் பரதநாட்டியம் நடைபெறுகிறது. 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கர் வழங்கும் கும்பாபிஷேக மகிமை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி பஜனை ஆகியவை நடைபெறுகிறது.

7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், மாலை 7 மணிக்கு திருவனந்தபுரம் கோபிகா வர்மா வழங்கும் மோகினியாட்டம் நடைபெறுகிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டலபூஜை, 9-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், கொடிமர பிரதிஷ்டை, மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, கோவிலைச்சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் தீபமேற்றும் லட்ச தீப விழா, இரவு 7 மணிக்கு பரத நாட்டியம் ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருநெல்வேலி அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, சுசீந்திரம் இணை ஆணையர் ஞான சேகர், குமாரகோவில் முருகன் குழும அதிபர் சிதறால் எஸ். ராஜேந்திரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News