பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் நாளை மகா தேரோட்டம்
- நாளை மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
- நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.
8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் நேற்று 82,463 பேர் தரிசனம் செய்தனர். 35, 385 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.