வழிபாடு

திருப்பதி கோவிலில் பரிணய கலகோற்சவம் இன்று மாலை நடக்கிறது

Published On 2023-01-07 07:55 GMT   |   Update On 2023-01-07 07:55 GMT
  • இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்கள்.
  • தாயார்கள், மலையப்பசாமி சார்பாக அர்ச்சகர்கள் ஒருவர் மீது ஒருவர் பூப்பந்துகளை வீசி எறிந்து மகிழ்வார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா முடிந்ததும், 6-வது நாளான இன்று (சனிக்கிழமை) பரிணய கலகோற்சவம் எனப்படும் ஊடல் உற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தனியாக வைபவ மண்டபத்தில் இருந்து தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்கள்.

அதேபோல் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் எதிர் எதிர் திசைகளில் வலம் வந்து வராகசாமி கோவில் அருகில் கிழக்கு மாடவீதிக்கு வருகிறார்கள்.

அங்கு அர்ச்சகர்கள் சாமி, தாயார்கள் சார்பாக நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் பாசுரங்களை தனித்தனியாகப் பாராயணம் செய்வார்கள். அதன்பிறகு தாயார்கள், மலையப்பசாமி சார்பாக அர்ச்சகர்கள் ஒருவர் மீது ஒருவர் பூப்பந்துகளை வீசி எறிந்து ஆடி, பாடி மகிழ்வார்கள். இதையடுத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

Tags:    

Similar News