திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே சக்கரத்தீா்த்த முக்கோட்டி உற்சவம்
- சக்கரத்தீர்த்தம் முக்கோட்டி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தீர்த்தங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக சக்கர தீர்த்தம் கருதப்படுகிறது.
திருமலையில் புனித கார்த்திகை மாதத்தில் அனுசரிக்கப்படும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று சக்கரத்தீர்த்த முக்கோட்டி உற்சவம். இந்தப் புனித சக்கரத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து தெற்குத் திசையில் சில மைல் தொலைவில் சேஷாசலம் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
தமிழ் கார்த்திகை மாதத்தின்படி, சுத்த துவாதசி நாளில், சக்கரத்தீர்த்தம் முக்கோட்டி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான சக்கரத் தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று நடந்தது.
அதையொட்டி நேற்று காலை கோவிலில் நடந்த பல்வேறு கைங்கர்ய சடங்குகளுக்குப் பிறகு, அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க சக்கரத் தீர்த்தத்தை அடைந்தனர்.
சக்கரத் தீர்த்தத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாரின் மானுட ரூபமான நரசிம்மர், ஆஞ்சநேயர் சிலைகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய பின் கோவிலுக்கு திரும்பினர். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சக்கரத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகள் தியானத்தில் இருந்த ஒரு பக்தர், ஒரு அரக்கனால் தாக்கப்பட்டபோது, ஏழுமலையான் தனது வலது கையில் இருக்கும் சக்கராயுதத்தை அனுப்பி அரக்கனை வதம் செய்து, அந்தப் பக்தரை காப்பாற்றினார். பின்னர் அந்தப் பக்தரின் வேண்டுகோளின் படி தன்னை நாடி வரும் மக்களை, பக்தர்களை காக்க பகவான் ஏழுமலையான் தம்முடைய சக்தி வாய்ந்த சக்கராயுதத்தை இதே இடத்தில் பதித்து விட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே அந்த நீரோடைக்கு சக்கரத் தீர்த்தம் என்றும் பெயரிடப்பட்டது. வராஹ புராணத்தின் படி, சேஷாசலம் மலைத்தொடரில் உள்ள 7 முக்கிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக சக்கர தீர்த்தம் கருதப்படுகிறது.