சாம்பல் புதனையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
- தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும்.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது.
இது கீழை நாடுகளின் "லூர்து " நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய " பசிலிக்கா" என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தின் போது புலால் உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்க இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்கு தந்தையர்கள் பூசி ஆசிர்வாதம் செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர் டேவிட் தன்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.