வேளாங்கண்ணி பேராலய திருவிழா காலங்களில் கடலில் குளிக்க தடை
- வேளாங்கண்ணி பேராலய திருவிழா 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆண்டு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா இந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. பேராலய திருவிழா காலங்களில் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பஸ்களில் பயணம் செய்ய பல்வேறு போக்குவரத்து மண்டலங்களில் இருந்து போதுமான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும்.
பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பஸ் நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளது. திருடர்களை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதிக்க வேண்டும். மேலும் திருவிழா காலங்களில் கடலில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்படும்.
வேளாங்கண்ணியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உணவு விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன், சுகாதார துணை இயக்குனர்விஜயகுமார், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.