வழிபாடு

மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-05-12 11:58 IST   |   Update On 2023-05-12 11:58:00 IST
  • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து செல்வார்கள்.
  • பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 30-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடுகளும், இரவில் அம்மன் திருவீதி உலாவும், மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் ஆர்.வீராசாமி நாட்டாண்மை குடும்பத்தினர் பால்குடமேந்தி மேளதாளங்கள் முழங்க முன்செல்ல அதைத்தொடர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து செல்வார்கள்.

பால்குட ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், காலை 8.15 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்து, மாவிளக்கு வைத்தும், பின்னர் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் மணப்பாறை போலீசார் சார்பில் நடைபெறும். மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வைரவன், பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில், மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Similar News