குழந்தைகள் சிறு வயதிலேயே உடல்பருமனாக இருப்பதற்கு உணவு மட்டும் காரணமல்ல!
- மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
- கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.
சமீப காலங்களில் நிறைய குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர் என்பது சரிதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஆரோக்கியமற்ற உணவுத்தேர்வு, குறைவான உடலுழைப்பு, குடும்ப உணவுப் பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக உடல் எடையுடன் குண்டாக வளர முக்கிய காரணங்கள் ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் வருமாறு:-
ஒரு குழந்தைக்கு வயதுக்கேற்ற, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறதென்றால் அதிகமாக இருக்கின்ற ஒவ்வொரு கிராம் எடையும் கூட பின்னாளில் அந்த குழந்தையை ஆரோக்கியமற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்த அளவு முதலியவைகளை உண்டுபண்ணும்.
உங்கள் குழந்தை உடல் பருமன் உள்ள பரம்பரையை சேர்ந்திருந்தால் அந்த குழந்தையும் குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்க வாய்ப்பு அதிகம்.
தன்னால், பெற்றோர்களால், குடும்பத்தால், சுற்றுப்புறத்தால் அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தமாக மாறி, அதுகூட உடல் பருமனை ஏற்படுத்தச் செய்யும். சில மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
வாரக்கணக்கில் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. மிக நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான இடம் கிடைக்காது. மாற்று இடத்தை தேடவும்.
சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதனால் அதிக ரத்த அழுத்தம் பின்னாளில் வரலாம். அதிக எடையினால் மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி வர வாய்ப்புண்டு. மூச்சுத் திணறல் ஆஸ்துமா, குறட்டை போன்றவை வர வாய்ப்புண்டு. கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.
ஆரோக்கியமான, சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு பண்ண வேண்டும். கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் போதுமான நேரம் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ஹார்மோன்கள் தொந்தரவு ஏற்பட்டு உடல் எடை கூட வாய்ப்புண்டு. ஆண்டுக்கு ஒருமுறை உடல் பருமனான குழந்தைகளை உங்கள் குடும்ப டாக்டரிடம் காண்பியுங்கள்.
சிறுவயதில் உடல் பருமனுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குவதும், வரவிடாமல் முன்னரே தடுப்பதும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் இப்பொழுதும் எப்பொழுதும் நன்றாக இருக்க உபயோகமாக இருக்கும்.