குழந்தை பராமரிப்பு

குழந்தைகளிடம் தவறியும் கூட இந்த மாதிரி வார்த்தைகளை பேசாதீர்கள்

Published On 2024-09-22 02:48 GMT   |   Update On 2024-09-22 02:48 GMT
  • தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
  • குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம்.

ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவே முனைப்பு காட்டுகிறார்கள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. அது அவர்களை மன ரீதியாக பலவீனமாக்கிவிடும். என்னென்ன வார்த்தைகளை கூறி குழந்தைகளை திட்டக்கூடாது என்று தெரியுமா?


'உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை'

குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அசட்டையாக இருப்பது, அவர்களின் கருத்துக்களை நிராகரிப்பது, தான் குடும்பத்தில் முக்கியமில்லாத நபராக, சுமையாக இருப்பவராக குழந்தைகளை சிந்திக்க வைத்துவிடும். தங்களை ஆதரவற்றவர்களாக எண்ணக்கூடும்.

'நீ புத்திசாலி என்று உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்குரிய தகுதி உனக்கு இல்லை'

உன்னை அதிபுத்திசாலி. எந்த பிரச்சனையையும் எளிதாக சமாளித்துவிடுவாய். அறிவாளி என்று நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி முட்டாளாக இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை.

உன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தையின் தன்னம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.


'நீ புத்திசாலி இல்லை'

குழந்தையின் அறிவுத்திறன் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை பாதிக்கக்கூடும்.

'நீ அவரை போன்றவர். எதற்கும் உதவ மாட்டாய்'

குடும்பத்தில் எவருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பப்படி செயல்படும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டு, 'நீயும் அவரை போன்றுதான் எதற்கும் உதவ மாட்டாய்.

நீ வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்தான்' என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் கூறக்கூடாது. அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.


'நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்'

குழந்தையை தொந்தரவு செய்பவர், எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் போல் சித்தரித்து பேசுவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தவறான வழிக்கு செல்வதற்கு வழிவகை செய்துவிடும்.

'நீ எதற்கும் தகுதி இல்லாதவன்'

உன்னிடம் எல்லா திறமையும் இருக்கிறது. எதையும் சிறப்பாக செய்துவிடுவாய் என்று எண்ணி இருந்தேன். உன்னால் சின்ன விஷயத்தை கூட எளிதாக கடந்து வர முடியவில்லை.

எதற்கும் தகுதி இல்லாதவன் என்று கூறி திட்டக்கூடாது. அது குழந்தை தன்மீது கொண்டிருக்கும் சுய நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கிவிடும். தான் எந்த தகுதியும் இல்லாதவன் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

'நீ அந்த குழந்தையை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'

குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம். அந்த குழந்தையை பார். எப்படி நன்றாக படிக்கிறது. நல்ல திறமைசாலியாகவும் இருக்கிறது.

அந்த குழந்தையை போல் நீயும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என கூறி மன நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அது அவர்களின் சுய மதிப்பை குறைத்துவிடும். தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு எந்த முயற்சியிலும் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிட நேரிடும்.


'உன்னால் ஏன் உன் சகோதர, சகோதரிகள் போல் இருக்க முடியவில்லை'

உடன் பிறந்தவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுவது போட்டி மனப்பான்மையையும், பொறாமை உணர்வையும் உருவாக்கிவிடக்கூடும். எப்போதும் சண்டையிடும் மனோபாவம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடும்.

'அழுவதை நிறுத்து. அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை'

செய்த தவறுக்கு மனம் வருந்தி குழந்தை அழும்போது கடுமையாக பேசக்கூடாது. அது குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாமல் வசைபாடுவது போலாகிவிடும். தன் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்று வேதனைப்படுவார்கள்.

Tags:    

Similar News