குழந்தை பராமரிப்பு

கண்டிப்பான பெற்றோரா நீங்கள்....குழந்தைகளை கவனமாக கையாளுங்கள்!

Published On 2024-10-27 04:14 GMT   |   Update On 2024-10-27 04:14 GMT
  • குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

களங்கமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் `குழந்தைகள்'. அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. எல்லா பெற்றோருமே குழந்தைகளுக்கு எல்லா விஷயத்திலும் சிறந்ததையே வழங்க விரும்புகிறார்கள்.

ஆனால் குழந்தைகள் சேட்டை செய்யும்போதோ, சொல் பேச்சை கேட்காமல் இருக்கும்போதோ அதிக கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அப்படி நடந்து கொள்வது நல்லதல்ல.


குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான கண்டிப்புகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் நீண்டகால மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பான ஆய்வுக்கு, கண்டிப்புக்கு உள்ளான 7 ஆயிரத்து 500 குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கேம்பிரிட்ஜ் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக மனநலம் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் மூன்று, ஐந்து மற்றும் ஒன்பது வயது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். அதில் 10 சதவீதம் குழந்தைகள் மோசமான மனநலம் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.


குழந்தைகள் கீழ்ப்படியாதபோது அவர்களை தனிமைப்படுத்துவது, கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.

பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிக்கும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

கடுமையாக தண்டிக்கும் பெற்றோரிடத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில்தான் வாழ்கிறார்கள்.

இதன் காரணமாக குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, இந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக பெற்றோரிடம் இருந்து விலகி செல்ல முடிவு எடுக்கின்றனர்.

வீட்டில் மன இறுக்கமாக இருப்பதால் பொதுவெளியிலும், நண்பர்கள் மத்தியிலும் மன இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்துகின்றனர். கண்டிப்பான பெற்றோர்களால் சுயமரியாதையை இழந்தவர்களாக உணருகிறார்கள்.

அதிக கடுமையான விதிகள் பெற்றோர்-குழந்தை உறவுகளை சீர்குலைத்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடுக்கின்றன.

கல்விக்காக பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது குழந்தைகளின் மன நலனை பாதிக்கிறது. பெற்றோருக்கு பயந்து படிப்பது குழந்தைகளின் கல்வித்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது.

கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளை சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அது அவர்களின் கனவுகளையும், படைப்பாற்றலையும் பாழ்படுத்திவிடும். இதனால் சின்ன பிரச்சனையை சந்தித்தால் கூட எவ்வாறு முடிவு எடுப்பது, எப்படி தீர்வு கண்டுபிடிப்பது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

அவ்வாறு செய்யும்போது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறிவிடுவர். அதிக கட்டுப்பாடுகளுக்குள் உள்ளாகும் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை கையாள இயலாமல் மன விரக்திக்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் பெற்றோருடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் உருவாகின்றன. அதனால் பெற்றோர் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த வேண்டும். அன்பு, அக்கறை, சுதந்திரம் ஆகியவற்றை கொடுத்து வளர்க்க வேண்டும்.


பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நம் குழந்தைகள் ஒழுக்கமானவர்களாக வளர வேண்டுமெனில், நாமும் அவ்வாறு இருக்க வேண்டும்.

எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி ஆதரவு, ஊக்கம் மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒழுக்கம் நிறைந்த சூழலில் குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்.

பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நண்பர்களாக மாறுவோம். குழந்தைகளுடன் பாதுகாப்பான உறவை வளர்ப்பது நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய மதிப்புமிக்க பரிசாகும்.

Tags:    

Similar News