செரிமான கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?
- சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.
- உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், உணவு எதிர்களித்தல் மற்றும் வாந்திக்கு காரணம் இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோயாகும் (அமில பின்னோட்ட நோய்). இது ஆங்கிலத்தில் ஜி.ஈ.ஆர்.டி என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது.
பொதுவாக உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள தசை நார்களும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் இயல்பாகவே இருக்கக்கூடிய வால்வு, நாம் விழுங்கும் உணவு மீண்டும் மேலே செல்வதை தடுக்கிறது.
இந்த வால்வு தளர்வடையும் போது வயிற்றில் இருக்கும் உணவுகள், அமிலம் மற்றும் திரவங்கள் உணவு குழாய்க்குள் மேல் நோக்கி தள்ளப்படுகிறது. இது உணவுக் குழாயில் ஒரு அழற்சியை ஏற்படுத்தி அமில பின்னோட்ட நோய் உண்டாக வழிவகுக்கிறது.
இந்நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் வருமாறு:
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தன்னியக்க நரம்பு பாதிப்பு, உடல் பருமன், புகைப்பிடித்தல், மது பழக்கம். ஹையாட்டஸ் ஹெர்னியா (இரைப்பை ஏற்றம்), சில மருந்துகளின் பக்க விளைவுகள். (உதாரணமாக-செமாக்ளூட்டைட், லிராக்ளூட்டைட், அமிட்ரிப்டில்லின், டையசிபாம், ஆஸ்பிரின், இப்யூபுரூபன்).
இந்த அமில பின்னோட்ட நோயை உதாசீனப்படுத்தினால் இது உணவுக்குழாய் இறுக்கம், பாரட்ஸ் உணவுக்குழாயாக மாறுதல் மற்றும் புற்றுநோய் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.
இந்த நோயை குணப்படுத்துவதற்கு எச் 2 தடுப்பான்கள் அல்லது புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் போன்ற மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.
இதில் குணமடையவில்லை என்றால் பண்டோப்ளிகேஷன், லிங்க்ஸ் சாதனம் பொருத்துதல் போன்ற அறுவை சிகிச்சை முறைகள் பலனளிக்கும்.
அமில பின்னோட்ட நோய் வராமல் தடுக்க சர்க்கரை நோயாளிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
இடது புறமாக தூங்குவது, தலை மற்றும் உடலின் மேற்பாகம் உயரே இருக்குமாறு தலையணையை பயன்படுத்துதல், இரவில் குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல், உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் உணவு அருந்துதல், காபி, சோடா, பாட்டிலில் உள்ள குளிர்பானங்கள், முட்டைக்கோஸ், வேர்க்கடலை, பூண்டு, பச்சை வெங்காயம், கொழுப்பு அல்லது வறுத்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.