தினமும் 3 கப் காபி குடித்தால் 2 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்
- அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
- தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான தசை, இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான இருதய நோய்கள், பக்கவாதம், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய், மறதி நோய் (டிமென்ஷியா) ,மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.