- உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது.
- மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும்.
உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது. புள்ளி விவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுபானங்கள் ஏற்படுத்தும் நோய்களால் இறக்கின்றனர்.
மேலும் 1½ கோடி பேர் ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
பொதுவாக, மதுபானங்களுக்கு அடிமையாவது மனித ஆற்றலை அழிக்கிறது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மது காரணமாக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு.
குடிப்பழக்கம் குடும்பங்களில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சிகரமான குடும்ப சூழலை அழிக்கிறது.
தனி மனிதர்களை பொறுத்தவரை தொடர்ச்சியாக மது அருந்தும் ஒருவருக்கு மன குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டமின்மை, மன அழுத்தம் ஆகியவை நிரந்தரமாக உருவாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து மது குடிப்பதால் மூளையின் ஆற்றல் சிதைந்து சிந்திக்கும் திறன் மற்றும் முடிவுகள் எடுக்கும் திறன் குறைந்து போவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆல்கஹால் பொதுவாக மூளை மற்றும் உடலை பலவீனமாக்கி உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது. இதற்கு காரணம், ஆல்கஹால் மூளை செல்கள் புதிதாக உருவாவதை தடுப்பது தான்.
மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும். சமீபத்திய சம்பவங்களை கூட மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். நன்கு தெரிந்தவர்கள் பெயர் கூட மறந்து போவதும், தேவையில்லாத பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து குழப்பமான மனநிலையை உருவாக்கும்.
மதுபானத்தால் மற்ற உறுப்புகளை விட மூளை மிக கடுமையாக பாதிக்கப்படும் போது அது மூளை தேய்மான பாதிப்பாக உருவெடுக்கிறது. இது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கி வேலை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.