உடலில் மருக்கள் அதிகமா உள்ளதா.... சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்
- சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும்.
உங்கள் கழுத்தில் இருக்கும் தோல் மருக்கள் அக்ரோகார்டன் (ஸ்கின் டேக்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொதுவாக கழுத்து, அக்குள், தொடை, கண், இமை, மார்பு, இடுப்பு, முதுகு போன்ற இடங்களில் இவை ஏற்படக்கூடும்.
தீங்கற்ற சதை வளர்ச்சியான இது, தோலின் மேற்பரப்புடன் ஒரு சிறிய தண்டு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். தோல் மருக்களுக்குள் நரம்பு செல்கள், கொழுப்பு செல்கள், நார்ச்சத்து, கொலோஜன், சிறிய ரத்த நாளங்கள் ஆகியவை இருக்கும். இதன் அளவு ஒன்று முதல் 20 மில்லி மீட்டர் வரை வேறுபடலாம். இது 'வார்ட்' எனப்படும் மரு வகைகளிலிருந்து வேறுபட்டது.
தோல் மருக்கள் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தோல் மருக்கள் அதிகம் இருப்பது, ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுதலாக இருப்பதன் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, இன்சுலின் எதிர்மறை நிலை, மரபணு கோளாறு ஆகியவை சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் மருக்கள் ஏற்பட வழிவகுக்கும் முக்கிய காரணங்களாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனைகளின் பட்டியலில் தொற்றுக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் மருக்கள் உள்ளது. இதற்கு பொதுவாக சிகிச்சை அவசியம் இல்லை. இது இயற்கையாகவே மறைந்து விடும்.
சில சமயம் தோல் மடிப்பு போன்ற இடங்களில் உள்ள மருக்கள், உராய்வு ஏற்படுவதன் மூலம் பெரிதாக வளரக்கூடும். இதற்கு தீர்வாக மருத்துவரை கலந்து ஆலோசித்து இதனை அறுவை சிகிச்சை, கிரையோதெரபி அல்லது மின் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றலாம்.