சர்க்கரை நோயாளிகள் புரோட்டீன் பவுடர் குடிக்கலாமா?
- ஒரு நாளைக்கு 0.8 கிராம் புரோட்டின் உட்கொள்ள வேண்டும்.
- தசைகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு மேம்படுகிறது.
நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் நன்றாக வளர, தொற்று மற்றும் அழற்சியிலிருந்து குணமடைய, புதுப்பித்து கொள்ள புரோட்டின் மிகவும் இன்றியமையாததாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள போதுமான அளவு புரோட்டினை உட்கொள்வது அவசியம்.
ஒரு நாளைக்கு, சராசரியாக ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரோட்டின் உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சற்று அதிகம் தேவைப்படும்.
உணவு மூலம் சரியான அளவு புரோட்டின் உட்கொள்ள முடியாதவர்கள் புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்ளலாம்.
புரோட்டின் பவுடர்கள் பொதுவாக 3 வகைப்படும்.
1) பால் அல்லது பால் பொருட்களில் இருந்து பெறப்படும் லாக்டோஸ்களை கொண்டுள்ள புரோட்டின் பவுடர் (கேசின், வேய்).
2) தாவர வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் லாக்டோஸ் இல்லாத புரோட்டின் பவுடர் (சோயா, பட்டாணி, பழுப்பு அரிசி).
3) முட்டையின் வெள்ளை கருவிலிருக்கும் நீர்ச்சத்து நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்.
புரோட்டின் பவுடரை தண்ணீரிலோ அல்லது பாலிலோ கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் புரோட்டின் பவுடர் உட்கொள்வதால் தசைகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு மேம்படுகிறது.
மேலும் இது நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தும், எலும்புகளை வலுவடையச் செய்தும், வயிறு நிறைவு உணர்வை ஏற்படுத்தி, உண்ணும் அளவை குறைத்தும், ரத்த சர்க்கரையை குறைக்கிறது.
புரோட்டின் பவுடர் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதாகவும், ஆன்டிஆக்ஸிடன்டஸ் பண்புகளைஅதிகரிப்பதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இடை உணவாகவோ அல்லது உடற்பயிற்சிக்கு முன்னரோ பின்னரோ எடுத்து கொள்ளலாம்.
புரோட்டின் பவுடரை நீங்கள் தினசரி பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், அதன் ஊட்டச்சத்து விவர சீட்டை நன்றாக சரிப்பார்த்து, ஒரு கரண்டியில் 20 முதல் 30 கிராம் வரை புரதம் இருக்கக்கூடியதாகவும், சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பவுடரையே தேர்ந்தெடுங்கள்.
புரோட்டின் பவுடர்களில் காபீன், கிரியாட்டின் போன்ற சேர்க்கை பொருட்களோ அல்லது ஆர்சனிக், ஈயம், காட்மியம் போன்ற அடர் உலோகங்களோ இருந்தால் அவற்றை தவிர்த்தல் நல்லது.
வேய் புரோட்டின் பவுடர் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பாஸ்பனேட்ஸ், லிவோ டோபா போன்ற மருந்துகளின் செயல்பாட்டிற்கு இடைவினைகள் ஏற்படுத்துவதால் மருத்துவரின் அனுமதி பெற்றே இதனை உட்கொள்ள வேண்டும்.
லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புள்ளவர்கள் புரோட்டின் பவுடரை தவிர்க்க வேண்டும்.