பொது மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது சரியா?

Published On 2024-11-10 07:29 GMT   |   Update On 2024-11-10 07:29 GMT
  • பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
  • சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் ஒரு சுவையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, மலிவான விலையில் கிடைக்ககூடிய பழமாக விளங்குகிறது.

ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்சத்து, 15 கிராம் சர்க்கரை, 422 கிராம் பொட்டாசியம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி ஆகியவையும், மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும், கேட்டிசின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.


ஒரு வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 31 முதல் 62 வரையிலும், கிளைசெமிக் லோட் 11 முதல் 22 வரையிலும் வேறுபடலாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் அதிகமாக இருக்கும்.

ஆனால் அதே சமயம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்சும், கிளைசெமிக் லோடும் குறைவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பொதுவாக பச்சை நிறத்தில் உள்ள சற்று பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

ஏனெனில் குறைவாக பழுத்த வாழைப் பழத்தில் இருக்கும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் இன்சுலின் எதிர்மறை நிலையை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

வாழைப்பழம் பழுக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் (மாவு சத்து) சர்க்கரையாக மாறுகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிகமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து, உணவு சாப்பிட்ட உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தாமதப்படுத்துகிறது.


வாழைப் பழம் பழுக்கும் போது அதனை திடமாக வைத்திருக்கும் பெக்டின் அளவு குறைந்து அதனை மிருதுவாக மாற்றுகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பெக்டின், குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் குடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஆற்றல் உடையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் குளுக்கோஸ் அளவு அதிகம் உள்ள பூவன்பழம், ரஸ்தாளி போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. அதிக நார்ச்சத்து உள்ள குறைவாக பழுத்த பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம்பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மலச்சிக்கலுக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சிறிய அளவிலான, குறைவாக பழுத்த வாழைப்பழத்தை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

Tags:    

Similar News