பொது மருத்துவம்
null

உடலை சீராகவும், சிறப்பாகவும் வைத்திருக்க உதவும் `உமிழ் நீர்'

Published On 2024-11-29 04:16 GMT   |   Update On 2024-11-29 09:25 GMT
  • உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
  • உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவுகிறது.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது. உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.


புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். இதனாலேயே முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள்.

உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவுகிறது என்ற நம் உணவுமுறை இன்று மாறி டெசர்ட் என்று கடைசியில் உணவு என்று மாற்றி தலைகீழாக பழக்கப்படுத்துகிறோம்.


உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று வகைகள் உள்ளன.

பரோடிட் சுரப்பி:

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி:

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.


உமிழ்நீரின் தன்மைகள்:

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள். உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.


மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.

வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின் அறிகுறியாகும்.

சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

இனியாவது போதை வஸ்த்துகளை வாயில் போட்டு மென்று, உமிழ்நீரை விஷநீராக மாற்றாமல், உடலை பாதுகாக்கும் அமிர்த நீராக மாற்றி உடலை பேணிக்காப்போம்.

Tags:    

Similar News