மூலநோயில் இருந்து விடுபட இத Follow பண்ணுங்க!
- உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது.
- வெளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும்.
மூலநோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.
'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையரின் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
மூல நோய் 4 நிலைகள் கொண்டிருக்கும். உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது ரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி இருக்கும். ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்றவை ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உணவுப்பழக்கம்:
* துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
* கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
* பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
* முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
* உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.
* வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.
* கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
* காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.
வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.