உள்நோக்கி வளரும் கால் நகங்கள்....காரணம் என்ன தெரியுமா?
- கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். உள்நோக்கி வளரும் கால் நகங்கள் 'ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
காரணங்கள்:
நகங்களை தவறாக வெட்டுதல் அல்லது மிக குறுகியதாக வெட்டுதல், நகங்கள் அசாதாரணமாக வளைந்து வளர்வது, முன்பகுதி இறுக்கமாக உள்ள காலணிகள் மற்றும் இறுக்கமான காலுறைகளை அணிதல், அடிபடுவது மற்றும் கனமான பொருள் கால் விரல் மீது விழும்போது ஏற்படும் காயம், தவறாக நிற்கும் அல்லது நடக்கும் தோரணை, மரபணு காரணங்களால் பிறப்பில் இருந்தே கால் நகங்கள் வளைந்து இருத்தல், அதிக வியர்வையின் வெளிப்பாட்டால் கால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, மோசமான கால் பராமரிப்பு.
தீர்வு:
கால்களை தினமும் 4 அல்லது 5 முறை, 15 முதல் 20 நிமிடங்களுக்கு, வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது எம்சம் உப்பு கலந்த நீரிலோ ஊற வைக்க வேண்டும். இதனால் நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் கால்களை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்.
நகங்களை வெட்டும் போது வளைவு வரை சென்று வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். முன் பகுதி அகலமாக அல்லது விசாலமாக உள்ள காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளில் ரத்த நாளங்கள் பாதிப்புள்ளவர்களுக்கும், நரம்புகளை பாதிக்கும் டயாபட்டிக் நியூரோபதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உள் நோக்கி வளரும் நகங்களால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தொற்றுக்கள் ஏற்பட்டால் அதை கட்டுக்குள் கொண்டு வர நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அழற்சியை தடுக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
இம்முயற்சிகள் அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம்.