சைனசைட்டிஸ் பிரச்சினை என்றால் என்ன?
- சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.
சைனஸ் என்பது கன்னம், மூக்கின் பின்புறம் மற்றும் நெற்றியில் இருக்கும் எலும்புகளில் உள்ள காற்று நிரப்பப்பட்ட சிறிய துவாரங்களாகும். பிரான்டல், மேக்சிலரி, ஸ்பீனாய்ட், எத்மாய்ட் எனப்படும் நான்கு ஜோடி சைனஸ்கள் தலையில் உள்ளன.
இதில் உள்ள மீயூகஸ் (சளி) மூக்கின் உட்புறத்தை ஈரமாகவும், சுத்தமாகவும் பராமரித்து, பாக்டீரியா மற்றும் இதர தொற்றுகள் வராமல் தடுக்கிறது. சைனசைட்டிஸ் அல்லது புரை அழற்சி என்பது சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.
பொதுவாக பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுக்களாலும் ஒவ்வாமையாலும் திசுக்களில் அழற்சி உண்டாகிறது. இது சைனஸ்சில் சளியை அதிகரிக்கச் செய்து அடைப்புக்கு வழி வகுத்து வலியை ஏற்படுத்துகிறது.
அக்யூட் சைனசைட்டிஸ், சப்பகியூட் சைனசைட்டிஸ், நாள்பட்ட சைனசைட்டிஸ், மீள்வரும் சைனசைட்டிஸ் என்று சைனசைட்டிஸ் நான்கு வகைப்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.
மேலும் புகைப்பிடித்தல், மூக்கு தண்டு விலகல், குளிர்கால நிலை, ஈரப்பதம் மாற்றம், காற்று மாசடைதல், மூக்கின் உட்பகுதியில் ஏற்படும் சதை வளர்ச்சி ஆகியவை சைனசைட்டிஸ் ஏற்பட காரணிகள் ஆகும்.
சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 54 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்றுக்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை குணப்படுத்த மூக்கடைப்பு நீக்கி, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரேக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை பலன் தராவிட்டால் எண்டோஸ்கோபி சைனஸ் அறுவை சிகிச்சையின் மூலம் பாதிப்படைந்த திசுக்களை நீக்குவது பலனளிக்கும்.