செய்திகள்

ரூபாய் நோட்டு பிரச்சினை: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- திருநாவுக்கரசர், இளங்கோவன் பங்கேற்பு

Published On 2016-11-21 14:16 IST   |   Update On 2016-11-21 14:16:00 IST
மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்திய ஆர்பாட்டத்தில் திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் பங்கேற்றனர்.

சென்னை:

மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததை கண்டித்தும், மக்களை தவிக்க விட்ட மோடி அரசு, ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

மத்தியில் நடைபெறும் ஆட்சி அகல வேண்டும் விரைவில் காங்கிரஸ் ஆட்சி வரும் என்று திருமாவளவன், தா.பாண்டியன் உள்ளிட்ட எல்லா தலைவர்களும் கூறி வருகிறார்கள். ரூ.1000, 500 நோட்டுகளை செல்லாது என்று இரவோடு, இரவாக மோடி அறிவித்து இருக்கிறார். மந்திரி சபையில் ஆலோசிக்காமல் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒப்புதல் பெறாமல் அவர் அறிவித்தது தவறு.

அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. எனவே ஜனாதிபதி மோடி அரசை கலைக்க வேண்டும். மக்கள் வீதிகளில் காத்து கிடக்கிறார்கள் என்பதை சுட்டிகாட்ட தான் ராகுல் காந்தி வீதிக்கு வந்தார். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது. அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கும் முன் கூட்டியே தெரியும். ஆனால் மக்களுக்குதான் தாமதமாக தெரிய வந்தது. மோடி தினம், தினம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்.

கருப்பு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார். ரூ.2½ லட்சத்திற்கு மேல் வங்கியில் செலுத்தினால் வருமான வரி துறை நடவடிக்கை என்றும் சொல்கிறார். ரூ.2½ லட்சம் சாதாரணமாக ஒரு சுப காரியம் நடத்த கூட போதுமானதாக இல்லையே சுவீஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தைத்தான் மக்கள் எதிர் பார்த்தார்கள. சுருக்கு பையில் வைத்து இருக்கும் பணத்தை பிடுங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கோடிக் கணக்கான மக்களை பட்டினியோடு தெருக்களில் அலைய விட்டு உள்ளார் மோடி. பொருளாதார சீர்திருத்தம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் கொண்டு வரப்பட்டது.

இந்திரா காந்தி பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வந்த போது மக்கள் பணத்தை மாற்றுவதற்கு வரிசையில் நின்றதை பார்த்து வருத்தப்பட்டார்.

ஆனால் மோடி இன்று மக்கள் அலையும் போது ஐப்பானில் பிரதமரோடு விருந்து சாப்பிட்டுகொண்டு இருந்தார்.

பிரதமர் மோடியோ ஏழை மக்கள் தனது சொந்த பணத்தை மாற்றுவதற்கு முதலில் மை என்கிறார். அடுத்து ஆடு, மாடுகளுக்கு போடுவது போல் காதில் ஓட்டை போடுவாரா? எந்த முன் யோசனையும் இல்லாதவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.

ராகுல் வங்கிக்கு வந்ததை நாடகம் என்று விமர்சிக்கிறார்கள். அப்படி ஆனால் அவரது 93 வயது தாயாரை வங்கிக்கு அனுப்பி வைத்தாரே? அது எதற்கு? இந்த மோசமான கட்சிக்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நாள் நெருங்குகிறது.

மத்தியில் தான் இப்படி ஒருஆட்சி என்றால் மாநிலத்தில் அதை விட மோசமான ஆட்சி நடக்கிறது. ஒரு நாள் கையெழுத்து போட்டார் என்று தகவல் வருகிறது. மறு நாள் செல்போனில் பேசினார் என்று தகவல் வருகிறது.

ஆனால் இன்று வெளி வந்துள்ள தகவல் இப்போது தான் எழுத பயிற்சி எடுத்து கொண்டு இருக்கிறார் என்று. அப்படியானால் அன்று கையெழுத்து போட்டது எப்படி?

ரூபாய் நோட்டு பிரச்சினையில் சிரமப்படும் மக்களை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தனக்கு சம்மந்தம் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கிறது. விரைவில் இந்த ஆட்சிகளை அகற் வேண்டும். காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ண சாமி, முன்னாள் எம்.பி.க் கள் ராணி, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, செல்வப்பெருந்தகை, விஷ்ணுபிரசாத், உ.பலராமன், பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாவட்ட தலைவர்கள் இரா.மனோகரன், ரங்க பாஷியம் மற்றும் நிர்வாகிகள் திருவான்மியூர் மனோகரன், தமிழ்ச்செல்வன், வில்லிவாக்கம் சுரேஷ், மயிலை அசோக்குமார், வேளச்சேரி ராஜ்குமார், நாச்சிக்குளம் சரவணன், இல.பாஸ்கரன், தாஸ் பாண்டியன், குறிஞ்சி பாலாஜி, தமிழ்செல்வன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி யஷ்வந்த் சாகர், ஜி.ஜி.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News