செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை: வைகோ அறிக்கை

Published On 2017-02-19 12:19 IST   |   Update On 2017-02-19 14:28:00 IST
நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பேரவை தலைவர் தனபால் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் அடிப்படையில், கவர்னரின் ஆணைக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பை பாராட்டத்தக்க விதத்தில் நடத்தி இருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக திரு ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 11 வாக்குகளும் பதிவாகின என்றும், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மொத்தமாக எதிர்த்து வாக்களித்தாலும்கூட அதனை மிஞ்சுகிற பெரும் பான்மையாக 122 வாக்குகள் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சருக்கு கிடைத்துள்ளன. நம்பிக்கை வாக்கில் முதல்வர் வெற்றி பெற்றார் என அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3ஆம் தேதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞரின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல் வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை கொண்டோரும், தமிழக மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News