செய்திகள்

பா.ஜ.க. எந்த சட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டும்: வாசன் கோரிக்கை

Published On 2017-05-31 11:11 IST   |   Update On 2017-05-31 11:11:00 IST
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டும் என ஜி.வே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாதவது:-

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 இலட்சம் உணவகங்கள் மூடப்பட்டதல் சுமார் ரூ. 500 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் சுமார் 2 இலட்சம் உணவகங்கள் மூடப்பட்டதால் சுமார் ரூ. 150 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மூடப்பட்டதால் அன்றாட உணவிற்கு உணவகங்களை நம்பி இருக்கின்ற பெரும்பாலானோர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

மேலும் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நடைபெற்ற மருந்து கடை அடைப்பால் சுமார் 31 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் சுமார் ரூ. 40 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை அடைப்பால் அவசர தேவைக்கு மருந்து வாங்க முடியாமல் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும்போது மருந்துக்கான விலையும், தேதியும் மாறும் போது பாதிக்கப்படுவது நுகர்வோர் தான்.

மேலும் மருந்து கடை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் பெருமளவு வியாபாரத்தை இழக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். எனவே மத்திய பா.ஜ.க. அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் குறிப்பாக மருந்து பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் முறையை தவிர்க்க முன்வர வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களின் கருத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்த முன் வந்திருந்தால் கடைகள் மூடப்படாமல், வர்த்தகம் பாதிக்கப்படாமல், பொது மக்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு இனி எந்த ஒரு சட்ட திட்டத்தை கொண்டுவர முயற்சித்தாலும் அது பொது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News