செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியா? - மதுசூதனன் விளக்கம்

Published On 2017-11-24 12:07 IST   |   Update On 2017-11-24 12:07:00 IST
ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மீண்டும் போட்டியா என்ற கேள்விக்கு மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டிருந்தது. அ.தி.மு.க. (அம்மா) அணி வேட்பாளராக டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி வேட்பாளராக மதுசூதனனும் போட்டியிட்டனர்.

இரட்டை இலை முடக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

தற்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னமும், கட்சியும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணியின் சார்பில் ஏற்கனவே வேட்பாளராக களம் இறங்கிய மதுசூதனன் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிடுவாரா? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘அ.தி.மு.க. வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும்’ என்றார்.

தி.மு.க. வேட்பாளர் யார் என கனிமொழி எம்.பி.யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ‘கட்சி தலைமை அறிவிக்கும்’ என்றார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாக குழு முடிவெடுக்கும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறித்து 2 நாளில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

பா.ஜனதா வேட்பாளர், “கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் முடிவு செய்யப்படும்” என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News