செய்திகள்

இறுதிச்சுற்றில் நாம் வெல்வோம்: நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

Published On 2017-11-24 14:33 IST   |   Update On 2017-11-24 14:34:00 IST
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.
சென்னை:

திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று அ.தி.மு.க. அம்மா அணியின் கொங்கு மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு,  கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டிடிவி தினகரன் பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். தன்னை பதவியில் அமர்த்தி அழகுபார்த்த சசிகலாவுக்கும் கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைப்பதாகவும், கட்சியின் தொண்டர்கள் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். அணிக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘ஆட்சி எப்படி சென்றாலும் கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. ஓ.பி.எஸ். அணியினர் கொடுத்த மனுவால்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தற்போது, இரட்டை இலை சின்னத்தை அவர்களிடம் வழங்கப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. பணம் மற்றும் பதவிக்காக மட்டுமே இன்றைய ஆட்சி நடைபெறுகிறது. முதல் சுற்றில் இரட்டை இலையை அவர்கள் வென்றிருக்கிறார்கள். இறுதிச்சுற்றில் நாம் வெல்வோம்’ என்றார் தினகரன்.



Similar News