சிறந்த திட்டங்களை நிறைவேற்றியவர் மு.க.ஸ்டாலின்: சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியன் பதில்
சென்னை:
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாடுகளையும், தமிழக மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அன்பையும் பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, பல்வேறு அவதூறுகளை இன்றைக்கு வாய்கூசாமல் பேசியிருக்கிறார்.
சென்னை மாநகரத்தினை பொறுத்தவரையில், ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமைக்குரிய சொந்தக்காரரான மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை எல்லாம் சென்னை மாநகர மக்கள் இன்றைக்கும் மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறார்கள். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல மேம்பாலங்களை உருவாக்கியது, மாநகராட்சிப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தியது, மழைநீர் வடிகால்களை சென்னை முழுவதும் சீரமைத்து, புதிய வடிகால்களை உருவாக்கியது என மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பேற்ற காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இன்னும் பல நூறாண்டுகள் கடந்தாலும், மு.க.ஸ்டாலின் பெயரைச் சொல்லும்.
அப்படிப்பட்ட மு.க.ஸ்டாலினை பற்றி இன்றைக்கு அவதூறு பேசும் சைதை துரைசாமி நிகழ்த்திய முறைகேடுகளையும், ஊழல்களையும் கூட சென்னை மாநகர மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. அவருடைய நிர்வாகத்தில் நடைபெற்ற அடுக்கடுக்கான முறைகேடுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன.
அவர் மேயர் பொறுப்பில் இருந்த நேரத்தில், சி.ஐ.டி. நகரில் உள்ள வீடு, ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள 10 ஏக்கர் பங்களா, தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்று, அதில் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அப்படிப்பட்டவர் மு.க.ஸ்டாலினை பற்றி குறைகூற புறப்பட்டு இருக்கின்றார்.
கடந்த 1996 முதல் 2002 வரை மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பேற்றிருந்தார். 2002-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, மேம்பால ஊழல் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டை எழுப்பி, கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் கைது செய்தார்கள். ஆனால், இதுவரை அந்த பொய் வழக்கில் எப்.ஐ.ஆர். கூட தாக்கல் செய்யப்படாத, செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. இதிலிருந்தே மு.க.ஸ்டாலினின் நிர்வாகம், கரைபடாத தூய்மையானதொரு நிர்வாகம் என்பது வெளிப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தொடர்ந்து இத்தனை ஆண்டுகாலமாக அ.தி.மு.க. அரசு நடைபெற்று, மாநகராட்சி நிர்வாகத்தினை துரைசாமி தனது கையில் வைத்திருந்தபோதும், தி.மு.க. நிர்வாகத்தில் நடந்த தவறுகளை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இருந்தும், அவரால் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுட்டிக்காட்டவோ, நிரூபிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. தி.மு.க. மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றியும், அவரது முறைகேடுகள் குறித்தும் நேரில் விவாதிக்க வருமாறு பலமுறை நான் அழைத்து விட்டேன். ஆனால், இதுவரை அதற்கான துணிச் சலும், அவரிடத்தில் வர வில்லை. எனவே, அப்படிப்பட்டவருக்கு பதிலளிக்க மு.க.ஸ்டாலின் தேவையில்லை, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன், எங்கே எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார், அவர் தயாரா என்பதை சைதை துரைசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தன் மீதான அடுக்கடுக்கான முறைகேடுகளை மூடி மறைக்க மு.க.ஸ்டாலின் மீது அவதூறு சொல்வதை நிறுத்தி விட்டு என்னுடன் நேருக்கு, நேர் விவாதிக்க சைதை துரைசாமி முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.