செய்திகள்

அ.தி.மு.க. அரசு கவிழும் நாள் நெருங்குகிறது: திருநாவுக்கரசர் பேச்சு

Published On 2018-02-06 14:50 IST   |   Update On 2018-02-06 14:50:00 IST
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் இந்த அரசு கவிழும் என்றும் அதற்கான நாட்கள் எண்ணப்பட்டு நெருங்கி வருவதாக திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை:

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு நிறைவேற்றி உள்ள சட்டத்தை மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு தடுத்து நிறுத்த கோரி காங்கிரஸ் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மீனவர் அணி தலைவர் கஜநாதன் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மீனவர்களை கைது செய்தால் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக மீட்கும். படகுகளும் விடுவிக்கப்படும்.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்து பா.ஜனதா அரசு தமிழக மக்களை ஏமாற்றி விட்டது.

ஏற்கனவே அனுபவித்து வரும் தொல்லையோடு இப்போது மீனவர்களை நசுக்கும் வகையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிரான கொடூர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டப்படி பிடிக்கப்படும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க முடியும். இதனால் மீனவர்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகி மீன்பிடி தொழிலே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மோடி அரசு உடனே தலையிட்டு இந்த சட்டத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களை காக்க வேண்டும்.

தமிழகத்தில் நடப்பது அனைத்துமே சட்டத்துக்கு புறம்பாகவே உள்ளது. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது.


கல்வித்துறையிலும் ஊழல் மலிந்து விட்டதை துணை வேந்தர் கைதின் மூலம் பார்க்கிறோம். கோடிக்கணக்கில் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்துதான் துணை வேந்தர்கள் பதவிக்கு வருகிறார்கள். போட்ட முதலீட்டை அவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அடிமை அரசாங்கம் நடக்கிறது. ஒரு நபரை பிடிக்கவில்லை என்பதற்காக சட்டமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார்கள்.

நானும் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து இருக்கிறேன். இவ்வாறு நீக்குவதற்கு எந்த சட்டத்திலும் இடம் இல்லை. வழக்கு கோர்ட்டு கைகளில் இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் இந்த அரசு கவிழும். அதற்கான நாட்கள் எண்ணப்பட்டு நெருங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், தங்கபாலு, வசந்த குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், வீரபாண்டியன், மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, இளைஞர் அணி தலைவர் அசன் ஆரூண், சிரஞ்சீவி, தாமோதரன், தணிகாசலம், சித்ரா கிருஷ்ணன், மைதிலி தேவி, துறைமுகம், ரவிராஜ், கருணாமூர்த்தி, சேகர், செரீப், சத்யா, எஸ்.கே.நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #tamilnews

Similar News