செய்திகள்
திமுக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ள பத்மநாபபுரம் தொகுதி கண்ணோட்டம்.
திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் த.மனோ தங்கராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜான் தங்கம் போட்டியிடுகிறார்.
சொத்து மதிப்பு
1. த. மனோ தங்கராஜ்
கையிருப்பு - ஒரு லட்சம் ரூபாய்
அசையும் சொத்து மதிப்பு: ரூ. 13,96,192.77
2. ஜான் தங்கம்
கையிருப்பு ரூ. 50 ஆயிரம்
அசையும் சொத்து- ரூ. 20,26,236
அசையா சொத்து- ரூ. 6,63,60,000
குமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் தொகுதிகளில் ஒன்று பத்மநாபபுரம். இங்கு மேற்கு தொடர்ச்சி மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான வயல் வெளிகள் ஏராளம் உள்ளன.
குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்கே தண்ணீர் வழங்கும் பேச்சிப்பாறை அணைக்கட்டு, குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதுமான மாத்தூர் தொட்டி பாலம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
ஆதிவாசிகள் முதல் 21-ம் நூற்றாண்டின் இளம்தலைமுறையினரும் இங்கு கலந்து வசிக்கிறார்கள். திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திய திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் இத்தொகுதிக்குள்தான் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் 9 ஆலயங்கள் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.
இத்தகு சிறப்பு மிக்க பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 362 பேரும், பெண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900 பேரும் உள்ளனர். 3&ம் பாலினத்தவர் 28 பேர் உள்ளனர்.
இங்கு தக்கலை, பத்மநாபபுரம், திருவட்டார், பேச்சிப்பாறை போன்ற ஊர்களும், பொன்மனை, வேளிமலை, சுருளோடு போன்ற கிராம பகுதிகளும், தோட்டமலை என்ற மலைவாசி கிராமமும் உள்ளன. இத்தொகுதிக்குள் நாடார் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்களுடன் ஆதிவாசி இனத்தவர், காணி இன மக்களும் இங்கு கணிசமாக உள்ளனர். இது தவிர பிறசாதியினரும் வசித்து வருகிறார்கள்.
நாடு விடுதலை அடைந்த பிறகு 1952-ம் ஆண்டில் முதல் முறையாக தேர்தல் நடந்தது. இதுவரை 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ், தி.மு.க.கட்சிகள் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க. 2006, 2011,2016 ஆகிய 3 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இது தவிர தமிழ்நாடு காங்கிரஸ், ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் தலா 2 முறையும், பாரதீய ஜனதா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் என வெற்றி பெற்றுள்ளனர்.
பத்மநாபபுரம் தொகுதிக்குள் காடும், காடு சார்ந்த பகுதிகளும் வருவதால் இங்கு அரசு கொண்டு வந்த தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் உள்ளூர் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல தொகுதி முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு இப்பகுதி மக்களின் பிரதான பிரச்சினையாக உள்ளது. பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இத்தொகுதிக்குள் இயற்கை ஆர்வலர்களை கவரும் பல பகுதிகள் இருப்பதால் சுற்றுலா தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தொகுதி மக்கள் விரும்புகிறார்கள்.
1952 நூர் முகமது (தமிழ்நாடு காங்கிரஸ்)
1957 நூர் முகமது (தமிழ்நாடு காங்கிரஸ்)
1962 குஞ்சன் நாடார் ( சுயேச்சை)
1967 ஜார்ஜ் (காங்கிரஸ்)
1971 சுவாமிதாஸ் (காங்கிரஸ்)
1977 சுவாமிதாஸ் (ஜனதா கட்சி)
1980 முகமது இஸ்மாயில் (ஜனதா கட்சி)
1984 பாலச்சந்திரன் (சுயேச்சை)
1989 நூர் முகமது (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு )
1991 லாரன்ஸ் (அ.தி.மு.க.)
1996 வேலாயுதன் (பாரதீய ஜனதா)
2001 ராஜேந்திர பிரசாத் (அ.தி.மு.க.)
2006 தியோடர் ரெஜினால்டு (தி.மு.க.)
2011 புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.)
2016 மனோ தங்கராஜ் (தி.மு.க.)