ஆன்லைன் மோசடிகளை தடுக்க 3 வகை வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்படும்- ரிசர்வ் வங்கி
- வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
- வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.
புதுடெல்லி:
வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி இன்று (புதன்கிழமை) அமல்படுத்துகிறது. அதன்விளைவாக 3 வகையான வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
முதலில் வருவது செயலற்ற வங்கிக்கணக்கு. தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத வங்கிக்கணக்குகள், செயலற்ற வங்கிக்கணக்குகள் ஆகும். விஷமிகள் மோசடி நடவடிக்கைகளுக்கு இத்தகைய வங்கிக்கணக்குகளையே குறிவைக்கிறார்கள். எனவே, வாடிக்கையாளர்களையும், வங்கித்துறையின் நேர்மையையும் பாதுகாக்க இத்தகைய கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இரண்டாவது, செயல்படாத வங்கிக்கணக்கு. கடந்த 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காதவை செயல்படாத வங்கிக்கணக்குகள் ஆகும். 12 மாதங்களாக எந்த பரிமாற்றமும் செய்யாத வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளையை தொடர்புகொண்டு, தங்கள் கணக்கை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.
மூன்றாவது, பூஜ்ய பேலன்ஸ் கணக்கு. நீண்ட காலமாக பூஜ்ய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக்கணக்குகள் மூடப்படலாம். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், மோசடி ஆபத்தை குறைக்கவும் இத்தகைய வங்கிக்கணக்குகள் மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.