செய்திகள்

பண மோசடி செய்ததாக தமிழக போலீசார் தேடிவந்த மதன் திருப்பூரில் கைது

Published On 2016-11-21 13:50 IST   |   Update On 2016-11-21 14:39:00 IST
கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால், தலைமறைவாகி தமிழ்நாடு போலீசாரால் தேடப்பட்டு வந்த சினிமா தயாரிப்பாளர் மதனை திருப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் மதன் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு காணாமல் போனார். இவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வந்தனர்.

டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்தனர். மதனின் நெருங்கிய தோழி கீதாஞ்சலி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமறைவான பிறகு அவரிடம் மதன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதன் எங்கெல்லாம் சென்றிருந்தார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

எந்த பகுதிகளில் அவர் தங்கியிருந்தார்? என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ள போலீசார் 4 மாநிலங்களிலும் முகாமிட்டு சாதாரண உடையில் அங்குள்ள தங்கும் விடுதிகளில் மதனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

“வாரணாசி, ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளில் மதனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். விசாரணையின்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன் சொத்து வாங்கியிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரில் இருந்து திருப்பூருக்கு ஒரு பெண்ணை சந்திப்பதற்காக வந்துள்ளார். அப்போது தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இன்று சென்னை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்தப்படுகிறார்” என்றார் கமிஷனர் ஜார்ஜ்.

Similar News